இலட்சக்கணக்கான உயிர்களை காத்த "பத்து ரூபாய் டாக்டர் " என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் மருத்துவர் ரத்தினம் காலமானார் என்கின்ற செய்தி வேதனையளிக்கிறது. பத்து ரூபாய் மருத்துவர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட தஞ்சை பட்டுக்கோட்டையைச் சேர்ந்த போற்றுதலுக்குரிய மருத்துவர் ரத்தினம் ஐயா அவர்கள் காலமானார் என்ற செய்தி பெரும் வேதனை அளிக்கிறது. தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவ சேவையாற்றியிருகிறார். குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் பிரசவங்களுக்கு பல ஆயிரங்களை கட்டணமாக வசூலித்து வரும் நிலையில், இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் தாய்மார்களுக்கு வெறும் ரூ. 10 மட்டுமே கட்டணமாக பெற்று சிகிச்சை அளித்திருக்கிறார். கொரோனா காலத்தில் தனக்கு சொந்தமான கட்டிடத்திற்கு வாடகையே பெற்றுக்கொள்ளாமல், பல இலட்சங்களை விட்டு கொடுத்திருக்கிறார் ரத்தினம் ஐயா அவர்கள். அவரது மறைவு என்பது தமிழ்ச்சமூகத்திற்கு மாபெரும் இழப்பாகும். மருத்துவர் ரத்தினம் ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்து கொள்வதோடு, ஐயாவின் மறைவிற்கு இரங்கலைக் தெரிவித்துக் கொள்கிறேன் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.