கடலூர்: ஆசிரியருக்கு வீடு கட்டி கொடுத்த முன்னாள் மாணவர்கள்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளி தொடக்கத்தில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த சந்திரா என்பவருக்கு அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து வீடு கட்டி கொடுத்த நிகழ்வு பார்ப்போரே நெகிழ்ச்சி அடைய வைத்தது. ஆசிரியர் சந்திரா தனியார் பள்ளி தொடங்கிய 1981ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகள் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். 

இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்த காலத்திலும் தற்போது ஓய்வு பெற்றுள்ள காலத்திலும் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். அந்த வீட்டில் சரியான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் மிகுந்த துன்பப்பட்டு துயரத்துடன் வாழ்ந்து வந்துள்ளதாக முன்னாள் மாணவர்களுக்கு தெரியவந்தது. இவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் இவர் நிலை குறித்து அறிந்து வேதனை உற்று இவருக்கு வீடு கட்டி தர வேண்டுமென முடிவெடுத்து முன்னாள் மாணவர்களின் முழு ஒத்துழைப்புடன் சுமார் மூன்று அரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு குறுகிய காலத்தில் கட்டி முடித்தனர். வீட்டின் சாவியை முன்னாள் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளியின் நிர்வாகிகள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி