சிதம்பரம்: வெடி விபத்தில் பெண் உடல் சிதறி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பு. முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான நாட்டுவெடி தயாரிப்புக் கூடம் பெரியகுமட்டி கிராமத்தில் உள்ளது. இந்த வெடி தயாரிப்புக் கூடத்தில் பெரியகுமட்டி கிராமத்தைச் சேர்ந்த லதா (39) என்பவர் இன்று (ஜூன் 15) வெடி தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருந்தார். 

வழக்கமாக 10 பேர் வரை வேலை செய்யும் இந்த வெடிமருந்துக் கூடத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லதா மட்டுமே பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் வெடி தயாரிப்புக் கூடத்தில் நாட்டுவெடி தயாரித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்த வெடிமருந்துக் கூடம் இடிந்து சுக்கு நூறானது. 

இந்த சம்பவத்தில் தொழிலாளி லதா உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். சிதறிய லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி