இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர் ஓணாப்பாளையம் பகுதிகளில் சிறுத்தை ஒன்று புகுந்து 8 ஆடுகளை கடித்து கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்தனர்.
ஆனால் சிறுத்தை பிடிபடவில்லை. இதற்கிடையே, ஓணாப்பாளையம் பூச்சியூர் பூபதிராஜா நகரில் கட்டுமான பணிகள் நடந்து வரும் வீட்டிற்குள் சிறுத்தை பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று வலையை வீசி, மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர்.
பிடிபட்ட சிறுத்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. மேலும், அதற்கு தோல் நோய் பாதிப்பும் இருந்தது. உடனடியாக சிறுத்தைக்கு மருதமலையில் உள்ள வனத்துறையினர் குடியிருப்பு பகுதியில் கால்நடை மருத்துவர் தலைமையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. குளுக்கோஸ் ஏற்றப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.