கோவை ஆட்சியரக ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்ய நேற்று நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு நிலவியது. 1989ஆம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்திற்காக கணபதி பகுதியைச் சேர்ந்த ராமசாமியின் 18 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், முழு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், அவரது வாரிசுகள் வழக்குத் தொடர்ந்தனர்.

கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி ஆட்சியர் அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. நேற்று நீதிமன்ற ஊழியர்கள் காவல்துறை பாதுகாப்புடன் வந்ததால் அலுவலகத்தில் பதற்றம் நிலவியது.

துறை அதிகாரிகளுடன் மாலைவரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசுத் தரப்பில் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி