கல்லூரி மாணவர்களுக்கு கத்திக்குத்து.. 5 பேர் கைது

கோவை மதுக்கரை அடுத்து திருமலையாம்பாளையத்திலுள்ள தனியார் கல்லூரியில் இரு நாட்களுக்கு முன் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதனை கிஷோர் என்பவர் உள்ளிட்ட மூவர் படம் பிடித்து பதிவிட்டனர். இதனைக்கண்ட கார்த்திக், யுவராஜ் உள்ளிட்ட 20 பேர், மூவரிடமும் தகராறு செய்து, ஒரு மாணவரை கழிவறைக்கு கூட்டிச்சென்று தாக்கினர். நிகழ்ச்சி முடிந்தபின் நேற்று(செப்.29) இரவு கிஷோர் மற்றும் நண்பர்கள் மதுக்கரையிலுள்ள தங்களது அறைக்கு திரும்பினர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த 7 பேர் கிஷோர் உள்ளிட்ட ஐந்து பேரை ஒரு பேக்கரிக்கு பின்புறம் அழைத்துச் சென்று கட்டை, செங்கல்லால் தாக்கினர். கிஷோருக்கு உதட்டிலும் மற்றொருவருக்கு முதுகிலும் காயமேற்பட்டது. ஒருவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நான்காவது நபருக்கு தலை, தோள்பட்டையில் காயமேற்பட்டது. அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நான்கு பைக்கில் வந்த 10 பேர் மோனிகாவுடன் தகராறில் ஈடுபட்டு கழுத்தை நெரித்துள்ளனர். தனது உயிரை காக்க மோனிகா தன்னிடமிருந்த சிறு கத்தியால் அவர்களை குத்தினார்.

இதில் ரத்தீஷ்குமார், முகேஷ், சபரிபாலகண்ணன் ஆகியோருக்கு காயமேற்பட்டது. இதுகுறித்து முகேஷ் புகாரில் மோனிகா, பிரவீசன் ஆகியோரையும், கிஷோர் புகாரில் முகேஷ், அஜய் ஈஸ்வரன், யுவராஜ் ஆகியோரையும், மதுக்கரை போலீசார் கைது செய்தனர். அழகேஸ்வரன், கார்த்திக் ஆகியோரை தேடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி