கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டுப்பன்றி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் அரிய வகை பறவைகளும் பறந்து திரிகின்றன. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து உடல்நிலை பாதிக்கப்பட்டும், காயம் அடைந்து மீட்கப்படும் வனவிலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க தமிழகத்திலேயே முதல் முறையாக சிறுமுகை அருகே பெத்திக்குட்டை மோதூர் காப்புக்காட்டில் வனத்துறை சார்பில் ரூ. 19½ கோடி செலவில் 120 ஏக்கரில் வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் புகுந்து விடுவதை தடுக்க சுற்றிலும் அகழி வெட்டப்பட்டுள்ளது.
அகழிக்கு 5 அடி மற்றும் 10 அடி தள்ளி 2 அடுக்குகளாக சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் பயிற்சி அளிப்பதற்காக 2 கிரால்கள் உள்ளன. வனவிலங்குகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக நவீன வசதிகளுடன் அரங்கு உள்ளது. அத்துடன் 2 இரும்பு கூண்டுகள், கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் தங்குவதற்கு 6 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் மேற்பார்வையில் நடைபெறுகிறது. இது நிறைவடையும் தருவாயில் உள்ளது.