கோவை: மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையத்தில் மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (40) என்பவர் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தபோது, தனது வீட்டின் பின்புறம் நேற்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு இருந்த அலுமினிய சீட்டைத் தொட்டபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அவரது உறவினர் நாகராஜ் (45), விக்னேஸ்வரனைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் அதே அலுமினிய சீட்டை மீண்டும் தொட்டதால், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கி விழுந்த விக்னேஸ்வரனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார். மின்னழுத்தக் கசிவு ஏற்பட்டதே இந்த விபத்திற்குக் காரணம் என பின்னர் தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி