கோவை: நெட்வொர்க் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தனர். 

அதன்படி கடந்த 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தி வரும் மின் கட்டணம் மற்றும் இதர துணை கட்டணங்களை ரத்து செய்ய வலியுறுத்தினர். அது ரத்து செய்யப்படவில்லை என்றனர். மேலும் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டான இந்த வருடமும் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என தெரிவித்தனர். 12kw மின் நுகர்வோர்களுக்கு 3B இலிருந்து 3A மாற்ற சட்டசபையில் அறிவித்தும் அரசாணை வெளியிட்டும் அதனை நடைமுறைப்படுத்தாமல் உள்ளதாக தெரிவித்த அவர்கள், அரசு உடனடியாக அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 

நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், தொழிற்சாலை கூரையின் மீது அமைக்கப்பட்ட சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு நெட்வொர்க் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் வெல்டிங் தொழிலுக்கு விதிக்கப்படும் 15% கூடுதல் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கூறினர்.

தொடர்புடைய செய்தி