கும்பாபிஷேகத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேற்று மருதமலைக்கு வருகை தந்தார். மலை அடிவாரத்தில் இருந்து கோவில் வரை சென்று கும்பாபிஷேக ஏற்பாடுகள், பக்தர்களுக்கான வசதிகளை ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் பக்தர்களுக்கு குடிநீர், ஓய்வெடுக்கும் வசதி, படிக்கட்டுகள் வழியாக நடந்து வரும் பக்தர்கள் இளைப்பாறுவதற்கான பந்தல்கள், வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மலைப்பாதையில் மட்டும் 16 இடங்களில் மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதையும் ஆட்சியர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள், முக்கிய பிரமுகர்கள் வரும் வழி, பாதுகாப்பு, மருத்துவ வசதி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், காவல் துறை அதிகாரிகள், அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.