கோவை: போலி பான் கார்டு கும்பல் கைது

கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கரூரில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, கடந்த 5 ஆண்டுகளாக போலி பான் கார்டுகள் தயாரித்து விற்பனை செய்து வந்த 6 பேர் கும்பலை நேற்று கைது செய்தனர். கரூரைச் சேர்ந்த ஜெயக்குமார் (52), கார்த்திக் (27), நவீன் சேகர் (22), சம்பத் (27), சீனிவாசன் (24) மற்றும் கலைவாணி (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இந்த கும்பல் போலி பான் கார்டுகளை பயன்படுத்தி ஆதார் கார்டுகள் பெற்று, பின்னர் அந்த ஆதாரை வைத்து உண்மையான பான் கார்டுகளையும் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 இவர்களிடமிருந்து 130 போலி பான் கார்டுகள், 69 சேர்க்கை படிவங்கள், ஒரு மடிக்கணினி, 6 செல்போன்கள் மற்றும் போலி பான் கார்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு போலி ஆவணங்கள் மூலம் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இந்த கும்பல் பெற்று கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு கார்டுக்கு ரூ. 5 ஆயிரம் வரை பெற்றுள்ளதாகவும், இதில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. வெளிமாநில நபர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் அடையாள அட்டைகள் பெறுவது தீவிர கண்காணிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி