கோவை: கனமழை எச்சரிக்கை; பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையின் நீர் தேக்க பகுதியில் அமைந்துள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், 2007 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலிருந்து மட்டுமன்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இந்த சுற்றுலா மையம், பசுமை மற்றும் இயற்கை அழகின் காரணமாக சுற்றுலா செல்லும் அனைவருக்கும் இனிமையான அனுபவத்தை வழங்கி வருகிறது. அணையின் நடுப்பகுதியில் ஏரி போல் காணப்படும் நீர் பரப்பில் படகுப் பயணம் மேற்கொள்வதும் இங்குள்ள பிரதான அம்சமாகும். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் விடுமுறை நாட்களில் நடைபெறவிருந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா நிகழ்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வனத்துறை இன்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி