கோவை: தீயணைப்பு வீரர் மர்ம மரணம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த தீயணைப்பு படை வீரர் ஜனார்த்தனன் (32), கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வந்த அவர், செல்வபுரத்தில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனவிரக்தி காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற ஜனார்த்தனன், சிகிச்சை பெற்று குணமடைந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு தனது அறையில் தூங்கச் சென்ற அவர் இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜனார்த்தனன் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஜனார்த்தனனின் மரணம் குறித்து போலீசார் கூறுகையில், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும், மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி