கோவை: குள்ள மனிதர்களின் வீடுகள் கண்டுபிடிப்பு

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியை ஒட்டிய பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில், தற்போது ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் கற்குவியல்கள், ஒரு காலத்தில் குள்ள மனிதர்களின் வீடுகளாக இருந்ததாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பவானிசாகர் அணை கட்டப்படும் முன்னர், இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்ததாகவும், மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

வரலாற்று தகவல்களின்படி, திப்பு சுல்தான் மைசூரிலிருந்து பாலக்காடு செல்ல இந்த வழியைப் பயன்படுத்தியதுடன், தண்டல் நாயக்கனின் கோட்டையும் இங்கு இருந்தது. அணை கட்டப்பட்ட பிறகு தண்ணீரில் மூழ்கிய வீடுகள் சிதலமடைந்து, தற்போது கற்குவியல்களாக காணப்படுகின்றன. சிலர் இந்த இடங்களில் புதையல் தோண்டியுள்ளதாகவும், பின்னர் அச்சம் காரணமாக முயற்சியை கைவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனைத் தெளிவுபடுத்த, இவை உண்மையில் குள்ள மனிதர்களின் குடியிருப்பாக இருந்ததா என்ற கேள்விக்கு பதிலாக, தொல்லியல்துறை விரைந்து ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி