சென்னையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ வானதி சீனிவாசன், எச். ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து கோவை, மாநகர் மாவட்டத்தில் பாஜ. வினர் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காட்டூர், ஆர். எஸ். புரம், சுந்தராபுரம், செல்வபுரம் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் அனுமதியின்றி தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தில் 45 பெண்கள் உள்பட 332 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், செல்வபுரம் என். எஸ். கே. சாலையில் பாஜ ஆர்ப்பாட்டத்தின் போது இதே பகுதியை சேர்ந்த பாஜ ஆலய ஆன்மீக மேம்பாட்டு பிரிவு மண்டல தலைவர் துரை, துணைத்தலைவர் மணிவண்ணன் ஆகியோர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் தமிழக அரசை அவதூறாக பேசி கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து செல்வபுரம் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.