கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று கோயம்புத்தூர் விழா துவங்கியது. இந்த விழா 24ஆம் தேதி வரை நடைபெறும். விழாவின் தொடக்கமாக லேசர் ஷோ நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், காவல் ஆணையாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செந்தில் பாலாஜி பேசுகையில், கோவை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதாகவும், இந்த விழா அடுத்த 50 ஆண்டுகளுக்கு மண்ணின் பெருமையை சொல்லும் என்றும் கூறினார். மேலும், வரும் 26ஆம் தேதி முதலமைச்சர் செம்மொழி பூங்காவை திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். முதல்வர் அனைத்து மாவட்டங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுவதாகவும், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வரும்போதெல்லாம் திட்ட முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிவதாகவும் அவர் குறிப்பிட்டார். கோவை விழா தம்முடைய குடும்ப விழா என்றும், ஒவ்வொரு ஆண்டும் இதில் பங்கேற்க விரும்புவதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.