கோவை: சட்டவிரோத டாஸ்மாக் பார்- கள்ளச்சந்தையில் மது விற்பனை

கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேவம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பார் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு அனுமதித்த நேரத்திற்குப் பிறகும், அதாவது இரவு 10 மணி முதல் மறுநாள் மதியம் 12 மணி வரை, இந்த பார் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், சட்டவிரோத மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். வேலைக்குச் செல்லும் நபர்கள் காலையிலேயே மது அருந்திவிட்டு வேலைக்குச் செல்வதால், குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அப்பகுதி வழியாகச் சென்ற நபர் ஒருவர், சட்டவிரோத மது விற்பனையை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், பார் மூடப்பட்ட பிறகும் மது விற்பனை நடைபெறுவது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இந்த சட்டவிரோத மது விற்பனையைத் தடுத்து, அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே பார் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி