கோவை துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. 1926-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியின் 100-வது ஆண்டை முன்னிட்டு, முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கல்விச் சீர் வழங்கும் நெகிழ்ச்சியான நிகழ்வை ஏற்பாடு செய்தனர். சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் இப்பள்ளிக்காக, 108 தட்டுகளில் பழங்கள், பூக்கள், இனிப்புகள் மற்றும் அன்றாட கல்வி உபகரணங்கள் சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டன. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த விழா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி தொடங்க நிலம் மற்றும் நிதியுதவி செய்த முன்னோர்களின் குடும்பத்தினரும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.