அன்னூர் அருகே சர்க்கார் சாமக்குளம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சரவணன் (38) என்பவர், அன்னூரில் செயல்பட்டு வரும் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதே நிறுவனத்தில், அன்னூர் அருகே மூக்கனூர் வடக்கலூர் அம்மன் நகரை சேர்ந்த தோயமணி (38) என்பவர் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்து, அவர்களிடம் இருந்து பெற்ற பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல், தோயமணி கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. கையாடல் செய்யப்பட்ட மொத்த தொகை சுமார் ரூ. 4,39,400 ஆகும். இதுகுறித்து நிறுவன மேலாளர் சரவணன், அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தோயமணி பணத்தை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் தோயமணியை நேற்று கைது செய்து, அவரிடம் இருந்து ரூ. 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், கையாடல் செய்யப்பட்ட மீதமுள்ள பணத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.