கடந்த சில வாரங்களாக பாகுபலி யானை சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு போன்ற பகுதிகளில் நடமாடி வந்துள்ளது. இந்நிலையில், நேற்று(செப்.29) இரவு சிறுமுகையில் இருந்து லிங்கபுரம் செல்லும் பிரதான சாலையில் லிங்காபுரம் கிராமத்தில் பாகுபலி யானை தனியாக நடந்து வருவதை அப்பகுதி கிராம மக்கள் கண்டுள்ளனர். யானை நடமாடுவதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு, செல்போன் மூலம் தகவல் பரிமாறி, எதிரெதிரே வரும் வாகனங்களை நிறுத்தச் சொல்லி போக்குவரத்தை தடை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, காட்டு யானை சாலையில் அமைதியாக நடந்து வந்து, வனப்பகுதிக்குள் சென்றது. பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் சுயாதீனமான செயல்பாட்டால், யானை வருவதை முன்கூட்டியே கண்டறிந்து தகவல் பரிமாறியதால், எந்தவித அசம்பாவிதமும் இன்றி நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.