வடவள்ளி: 58 பவுன் நகை கொள்ளை - 5 பேர் கைது

கோவை வடவள்ளி பெரியார் நகரில் பகல் நேரத்தில் பள்ளி ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20ஆம் தேதி, மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் கலைவாணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மர்ம நபர்கள் வீட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். கணவர் ரமேஷ் வீட்டிற்கு வந்தபோது, திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வடவள்ளியைச் சேர்ந்த மோகன் கிருஷ்ணன் (27), கேரளாவைச் சேர்ந்த பிரவீன் (42), மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சையுபுதீன் (42), வடவள்ளியைச் சேர்ந்த தினேஷ், தேவிகா ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 பவுன் நகை, பணம் மற்றும் திருட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவை நேற்று (டிசம்பர் 31) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் மோகன் கிருஷ்ணன் மற்றும் பிரவீன் மீது கர்நாடகா, கன்னியாகுமரி மற்றும் கேரளா காவல் நிலையங்களில் ஏற்கனவே 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி