துடியலூர்: பொதுமக்களை அச்சுறுத்தும் காட்டு யானை

கோவை, துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, பழையூர் புதூர், தாளியூர், வண்டிக்காரனூர், பொன்னூத்தம்மன் கோயில் சுவாமி பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய விளைப்பயிர்களை தின்று சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை இரண்டு நபர்களை தாக்கி கொன்றுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 25) இரவு ஆறு குழுக்களாக பிரிந்த வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு முறை காட்டு யானையானது ஊருக்குள் புகுந்தது. இருந்தபோதிலும் வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர். 

இந்த நிலையில் அந்த யானை வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள நந்தகுமார் மற்றும் சோமையம்பாளையம் பகுதியில் உள்ள சுந்தரம் என்பவர் தோட்டங்களுக்குள் புகுந்து அங்கு உள்ள தென்னை, வாழை மற்றும் அங்கு போடப்பட்டிருந்த போர்வெல் மோட்டார்களையும் சேதப்படுத்தியுள்ளது. 

மேலும் சோமையாம்பாளையம் பகுதியில் உள்ள சுந்தரம் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை அங்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உளித்தவற்றை வெளியே இழுத்து போட்டு சுவைத்து தின்றுவிட்டு சென்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி