கோவை: தமிழக அரசின் செயல் ஏற்புடையது அல்ல- முத்தரசன்

கோவை மாவட்ட வன அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்பு காவலர்கள் தங்கள் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதாக கூறப்படும் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (நவம்பர் 22) முறையீடு செய்தனர்.

இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், வேட்டைத் தடுப்பு காவலர்கள் பல ஆண்டுகளாக வனத்துறையில் பணியாற்றி வருவதாகவும், சட்டவிரோத வனவிலங்கு வேட்டையைத் தடுப்பது, வனப்பகுதிக்குள் வனவிலங்குகளை திருப்பி அனுப்புவது, வனவிலங்குகளைப் பாதுகாப்பது, காடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பெரும்பாலான வேட்டைத் தடுப்பு காவலர்கள் பட்டதாரிகள் என்றும், குறிப்பாக பழங்குடியின மலைவாழ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழக அரசு இப்பணியை தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அவ்வாறு செய்தால் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கும் வனத்துறைக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

தமிழக அரசு உடனடியாக இந்த முடிவை கைவிட வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தினார். தனியார் வசம் இப்பணியை ஒப்படைப்பது ஏற்புடையதல்ல என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி