தும்கூரை சேர்ந்த அமோஸ் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோர் 2019 ஆம் ஆண்டு கோவையில் பெண்களிடம் அறிமுகமாகி, தங்களுக்கு புடவை வியாபாரம் இருப்பதாகவும், முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். பல பெண்களும் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்துள்ளனர். ஆனால், தம்பதி கூறியபடி லாபம் கிடைக்கவில்லை. பணத்தை கேட்டபோது, வெளிநாட்டில் இருந்து சரக்கு வர தாமதம் என்றும், துறைமுகத்தில் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி மேலும் பணம் பெற்றுள்ளனர்.
மொத்தமாக 15 பேரிடம் 3½ கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். ஒவ்வொரு முறை பணம் வாங்க வரும்போதும், சிலருக்கு மாந்திரீக கயிறுகளை கட்டி பணம் பெற்று சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். தற்போது தற்கொலை செய்யும் நிலையில் இருப்பதாகவும், தங்களுக்கு பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று புகார் அளித்துள்ளனர். இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.