இப்படி பரபரப்பாக இயங்கும் இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களை கூட பொருட்படுத்தாமல், பணிபுரிகின்றனர். ஒதுங்குவதற்கு கூட சரியான இடம் இல்லாத நிலை உள்ளது. அதிலும் இந்த டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் சாலையோரங்களில் ஒதுங்கி நிற்கும் நிலை உள்ளது.
இந்த ஊழியர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற நிலை உள்ளது. சில நாட்களுக்கு முன் டெல்லியில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் பணியாளர்களின் மாநாடு நடைபெற்றது. தற்போது தங்களுக்கு போதிய பணி பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தங்களுக்கும் பிற ஊழியர்களைப் போல வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று ஆன்லைன் உணவு டெலிவரி பணியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழகத்தில் முதல் முறையாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்காக இலவச ஏசி ஓய்வறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்தது.