வில்லிவாக்கம் அடுத்த பாரதிநகர் முதல் தெருவில் வில்சன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கேட்டில் மர்ம நபர்கள் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்து வில்சன் மற்றும் குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்தபோது கேட் தீபிடித்து எரிந்துள்ளது.
இதனால் அனைவரும் ஒன்று சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்ததும் வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெட்ரோல் நிரப்பி வீசப்பட்ட பிளாஸ்டிக் கேனை கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ஏற்கனவே இந்த முகவரியில் வசித்து வந்த ஆண்ட்ரூஸ் என்பவரின் மகன் அலெக்ஸ் என்பவரை கடந்த 2022ம் ஆண்டு ஐசிஎப் காவல் நிலைய பகுதியில் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளில் ஒருவரான நவீன் என்ற லொட்ட நவீனை நேற்று (ஜனவரி 1) அம்பத்தூரில் மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். இந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.