கடந்த சில மாதங்களாகவே ராமதாஸுக்கும் - அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிவரும் நிலையில் உலக தந்தையர் தினத்தில் அன்புமணி பகிர்ந்த பதிவில் “தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்; எல்லா நாளும் வணங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி தனது எக்ஸ் பக்க பதிவில், தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லாநாளும் தந்தையரை வணங்குவோம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், ராமதாஸ் அளித்த பேட்டி ஒன்றில், உலகளவில் விருது பெற்றால் மட்டும் போதாது. தாய், தந்தையரிடமும் விருது பெற வேண்டும். 2026 தேர்தலுக்குப் பிறகு வேண்டும் என்றால், அன்புமணிக்கு தலைவர் பதவியைக் கொடுப்பதாக கூறினேன். ஆனால், நடப்பதை எல்லாம் பார்க்கும்போதும், அவருடைய செயல்பாடுகளை பார்க்கும்போது, என்னுடைய மூச்சுக்காற்று அடங்கும் வரை, அந்தப் பதவியை நான் கொடுக்கமாட்டேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தந்தையரை தியாக தீபங்களாக உருவகப்படுத்தியுள்ள அன்புமணியின் இன்றைய வாழ்த்துச் செய்தி அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.