சென்னை: பாஜக தலைவர்கள் கைது.. இந்து முன்னணி காட்டம்

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதனைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில், இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை காவல் துறை கைது செய்துள்ளது.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு திமுகவை விமர்சிக்கும் அனைவரையும் கைது செய்வது என்பது ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயலாகும். டாஸ்மாக் மூலமாக ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் துணையுடன் இந்த ஊழல் அரங்கேறி உள்ளது.

இதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக. கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி