சென்னை: மாநிலங்களவை உறுப்பினர்களாக 6 பேரும் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவை உறுப்பினர்களாக மநீம தலைவர் கமல்ஹாசன், திமுகவின் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுகவின் இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதுடன், அதற்கான சான்றிதழையும் பெற்றுக் கொண்டனர். 

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர்களில் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியம், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இணை செயலர் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் போட்டியிட்டனர். தொடர்ந்து, கடந்த ஜூன் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. ஜூன் 10-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள், எம்எல்ஏக்கள் முன்மொழிவு இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டன. 

திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட 6 பேரது மனுக்கள் ஏற்கப்பட்டன. தொடர்ந்து, இன்று (ஜூன் 12) மாலை 3 மணிவரை மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டது. அவகாசம் முடிவடைந்த நிலையில், வேறு யாரும் போட்டியிடாத நிலையில், வெற்றி பெற்றவர்கள் தொடர்பான விவரங்களை, தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியம் வெளியிட்டார்.

தொடர்புடைய செய்தி