சென்னை: தமிழக அரசின் எரிஉலை திட்டங்கள்.. அன்புமணி கருத்து

சுற்றுச்சூழலை காக்கவும், பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், தமிழ்நாடு அரசின் எரிஉலை திட்டங்களை தடுக்கவும் சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளாஸ்டிக் உற்பத்தி முதல் கடலில் கலக்கும் மாசு வரை, முழு வாழ்க்கை சுழற்சியை உள்ளடக்கி இருக்க வேண்டும். ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை வெளிப்படையாக உறுதி செய்யும் வழிகள் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதாகக் கூறி, பிளாஸ்டிக் குப்பையை எரிக்கும் எரிஉலை (incinerator) திட்டத்தை 1,026 கோடி ரூபாய் செலவில் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. 

இது ஒரு ஆபத்தான திட்டம் ஆகும். காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்பமடைய காரணமான பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் இத்திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். சுற்றுச்சூழலை காக்கவும், பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், தமிழ்நாடு அரசின் எரிஉலை (incinerator) திட்டங்களை தடுக்கவும் சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி