தேனாம்பேட்டை: கர்ப்பிணிகள், முதியோர் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

கொரோனா பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. எனினும், பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணிகள், முதியவர்கள், இணைநோய் உள்ளவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் கொழுப்புமிகு கல்லீரல் நோய் விழிப்புணர்வு பயிற்சி முகாமை சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, கொரோனா பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் 216 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 3 நாட்களில் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் பாதிப்புகள் குணமடைகின்றன. இதுபோல பாதிப்புகளுக்கு உள்ளானவர்களை அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். 

மத்திய சுகாதார துறை அறிவுறுத்தலின்படி, பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணைநோய் பாதிப்பு உள்ளவர்கள் முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது. இணைநோய் உள்ளவர்கள் உயிரிழக்கும்போது, கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அது கொரோனா இறப்பாக கருதப்படாது என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி