சென்னை மெட்ரோ விபத்து: அதிகாரி விளக்கம்

சென்னை பூந்தமல்லி முதல் கிண்டி வரையிலான மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று (ஜூன் 12) இரவு ராமாபுரம் அருகே போரூரில் எல் & டி அலுவலகத்தின் வாயில் பகுதியில், மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் தூண் ஒன்று திடீரென உடைந்து கீழே விழுந்தது. 

இந்த விபத்தில் காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ மேம்பால பணி திட்ட இயக்குநர் அர்ஜூன், "மெட்ரோ பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலை துறை பாலத்தின் ஒரு தூண் விழுந்துள்ளது. இந்த தூண் பொருத்தப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிறது. அதற்கு பக்கபலமாக A வடிவ இரும்பு உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இரும்பு உபகரணம் பொருத்தப்பட்ட வெல்டிங்கில் உடைப்பு ஏற்பட்டு, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணம் உலோகத்தின் உறுதித்தன்மை இழப்புதான். எனவே, இனிமேல் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த விபத்தால் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மெட்ரோ நிர்வாகம் சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி