சென்னை: 3 கடைகளில் திடீர் தீ விபத்து; பரபரப்பு

சென்னை ராமாபுரத்தில் செயல்படும் பழைய பொருட்கள் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது அருகே உள்ள கார் மெக்கானிக் செட், பர்னிச்சர் குடோன் என இரண்டு கடைகளிலும் பரவி தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து தகவல் அறிந்து விருகம்பாக்கம் ராமாபுரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், கட்டுக்கடங்காத தீயால் வானுயர கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து அருகே இருந்த குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். அதேபோல் உடனடியாக மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக ராமாபுரம், விருகம்பாக்கம், கோயம்பேடு, தி நகர், ஜெ. ஜெ நகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த 8 தீயணைப்பு வாகனங்கள் உட்பட 15 வாகனங்களுடன் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பழைய பொருட்கள் கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், பர்னிச்சர் குடோனில் இருந்த கட்டில் மெத்தைகள், மற்றும் கார் ஷெட்டில் இருந்த ஒரு காரும் எரிந்து நாசமாயின. விபத்து குறித்து ராமாபுரம் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி