இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைபாதை விளிம்புகளுடன் கட்டிடங்களை இணைத்திடும் சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. சென்னை மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்கும் வகையில் கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் அகற்றுதல், சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பின்வரும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன. கட்டிட கழிவுகள் மற்றும் உடைந்த செங்கற்களை சரிவான இணைப்புகளுக்காக பயன்படுத்துதல் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக, மரம் அல்லது இரும்பு போன்ற சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத பொருட்களைப் பயன்படுத்தலாம்.
இந்த இணைப்புகள் பாதுகாப்பாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பொதுநலப் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும், மழைநீர் வடிகால் பராமரிப்புக்கு எவ்வித தடையில்லாதவையாகவும் இருக்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது