சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சண்டிகேஸ்வரர் சேவா அறக்கட்டளைத் தலைவரான டி. சுரேஷ்பாபு, தாக்கல் செய்துள்ள மனுவில், "கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோயிலில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி அன்று குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழ் கடவுளான மருதமலை முருகன் கோயில் அருணகிரிநாதரால் பாடல்பெற்ற திருத்தலம் மட்டுமின்றி, கோயில் அருகே உள்ள மலைக்குகையில் பாம்பாட்டி சித்தர் யோக நிலையில் ஜீவசமாதியடைந்த முக்கிய தலமாகவும் விளங்குகிறது. இந்நிலையில், மருதமலை முருகன் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழா வேள்வி குண்ட நிகழ்வுகளில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தமிழில் சைவ மந்திரங்களை ஓத அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்.
தமிழில் குடமுழுக்கு விழா நடத்துவது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு இன்னும் முழுமையாக அமல்படுத்தவில்லை. எனவே, எனது கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.