அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மீது கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்படி, ஆலந்தூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்ததாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த 2013-ம் ஆண்டு சென்னை, தியாகராய நகரில் வீடு புகுந்து கொள்ளையடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது ஞானசேகரன் என தெரியவந்தது.
இதையடுத்து புழல் சிறையில் இருந்த ஞானசேகரன் மாம்பலம் போலீஸாரால் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, சைதாப்பேட்டை 15-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏப். 3-ம் தேதி வரை ஞானசேகரனுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் புழல் சிறைக்கு ஞானசேகரன் அழைத்துச் செல்லப்பட்டார்.