தண்டையார்பேட்டை: துணிக்கடையில் திருடிய ரவுடிகள் கைது

ராயபுரம் மேற்கு கல்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (68). இவர், அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த ரூ. 8,000 திருடு போனது தெரிந்தது. 

இதுகுறித்து ராயபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராயபுரம் போலீசார் எம்சி ரோடு காமாட்சியம்மன் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பைக்கில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கிய போது ஒருவர் தப்பினார். மற்றொருவரை பிடித்து விசாரித்தனர். 

அதில், சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த தனுஷ் (19) என்பதும், இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இவர், தனது நண்பர்களுடன் திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலையில் நிறுத்தி இருந்த மொபட்டை திருடி, அதில் எம்.சி ரோட்டிற்கு வந்து திருட்டில் ஈடுபட முயன்றதும் தெரிந்தது. 

மேலும் இவர்தான் ஜெயச்சந்திரனின் துணிக்கடையில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது நண்பர்களான கார்த்தி, பிரகாஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி