கடலில் மீன் வளத்தைப் பெருக்கும் விதமாக, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வங்கக் கடலில், நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்த வகையில் மேற்கு கடற்கரையில், அரபிக் கடல் பகுதியில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டது.
இதனால், விசைப்படகு மீனவர்கள் ஏப். 15-ம் தேதி முதல் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் இன்று (ஜூன் 14) இரவுடன் நிறைவடையும் நிலையில், நேற்று மாலையிலிருந்தே சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.