சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல இணை ஆணையாளர் பிரவேஷ் குமார், காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், வாகன தணிக்கையின்போது ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வந்த வாகனத்தில் கஞ்சா இருந்தது.
இதனை கண்காணித்த போலீசார் அப்போது கஞ்சாவுடன் தப்பி சென்றவர்களை தான் போலீசார் விரட்டி சென்று சுற்றிவளைத்தனர். அச்சமயத்தில் காக்கா தோப்பு பாலாஜி, போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். இதனால் தான் போலீசார் பதில் தாக்குதல் நடத்தும் சூழல் உருவானது.
இந்த சம்பவத்தில் காக்கா தோப்பு பாலாஜியின் இடது மார்பில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் படுகாயமடைந்த நபரை சோதிக்கும்போது உயிர் இருந்தது. இந்த தாக்குதலுக்கு பிறகே அந்த நபர் காக்கா தோப்பு பாலாஜி என்பது தெரியவந்தது. இவர் மீது 58 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காக்கா தோப்பு பாலாஜியுடன் உடன் காரில் வந்த மற்றொரு நபரைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் இருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன எனத் தெரிவித்தார்.