சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் ஒன்று நேற்று முன்தினம் (செப்.,30) மாலை வந்தது. அதில் கல்லூரி வளாகத்தில் சக்தி வாய்ந்த வெடி குண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் கூறியிருந்தாக கூறப்படுகிறது. இதை கவனித்த நிர்வாகிகள் உடனே கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்படி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையிலான போலீசார் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் அண்ணா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் எந்த வெடிகுண்டுகளும் சிக்கவில்லை. இதனால் இது வெறும் புரளி என தெரியவந்தது. பின்னர் சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்னஞ்சல் மூலம் 14வது முறையாக வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர்.

அதேபோல் மேடவாக்கம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். அதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி