சென்னை: மாணவி விவரம் அடங்கிய எஃப்ஐஆர் கசிந்த வழக்கு; சிபிஎம் கோரிக்கை

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை கசியவிட்ட வழக்கில் தேசிய தகவல் மையம் உள்பட விசாரித்து இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காத விதத்தில் கடும் நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று பெ. சண்முகம் கூறியுள்ளார்.இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்த தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வரவேற்கிறது.இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலையீட்டின் பேரில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட புலன் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விரைவாக விசாரித்த மகளிர் நீதிமன்றம் ஒரு சில மாதங்களிலேயே குற்றத்தை உறுதி செய்து தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.மேலும், இந்த பாலியல் வன்முறை வழக்கின் விபரங்களுடன், பாதிக்கப்பட்ட பெண் அடையாளங்களை உள்ளடக்கிய முதல் தகவல் அறிக்கை கசியவிட்ட வழக்கில் தேசிய தகவல் மையம் உள்பட விசாரித்து இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காத விதத்தில் கடும் நடவடிக்கையை உறுதி செய்யவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி