சென்னை: மாநகர பேருந்து நிறுத்தங்கள் சீரமைக்கும் பணி..

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.35 கோடியில் பேருந்து நிழற்குடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து நடைபாதைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் வழியாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 31 பணிமனைகளில் இருந்து நாள்தோறும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 30 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வருகின்றனர். இந்த வழித்தடங்களில் 1,363 பேருந்து நிழற்குடைகளை மாநகராட்சி அமைத்துள்ளது. 

இவை, பொதுமக்களை கோடைக்காலத்தில் வெயிலில் இருந்தும், பருவமழைக் காலத்தில் மழையிலிருந்தும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிழற்குடைகளை தூய்மையாக பராமரிக்க கடந்த மாநகராட்சி சார்பில் கடந்த ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இந்த நிழற்குடைகளை ரூ.4.35 கோடியில் சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான டெண்டரும் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்க இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி