நிலம் வைத்திருந்தால் விவசாயி ஆகிவிட முடியாது: அமைச்சர்

வரும் தேர்தலில் போலி விவசாயி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என்று இபிஎஸ்ஸுக்கு அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மோடி அரசின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் எனச் சொன்ன கே. சி. பழனிசாமியை மின்னல் வேகத்தில் கட்சியைவிட்டு நீக்கி, பாஜகவின் ராஜ விசுவாசத்தைக் காட்டிய கொத்தடிமைதானே பழனிசாமி.

சேலம் எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய விவசாயிகள், பெண்களின் குறைகளையும் குமுறல்களையும் கூட காது கொடுத்துக் கேட்க மனமில்லாமல் அவர்கள் மீது கொடூர அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுத் துன்புறுத்திய பழனிசாமி நானும் விவசாயி என வேடம் போடுகிறார்.

நிலம் வைத்திருப்பதால் மட்டுமே விவசாயி ஆகிவிட முடியாது. உழவர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல மனமும் வேண்டும். மனதில் அழுக்கை வைத்துள்ள பழனிசாமி, என்றென்றைக்கும் உலகுக்கே உயிரூட்டும் உழவர் ஆகிவிட முடியாது. போலி வேடம் போட்டு உழவர்களை ஏமாற்றும் வித்தை எல்லாம் தமிழ்நாட்டில் என்றும் பலிக்காது. வரும் தேர்தலில் போலி விவசாயி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி