டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ரூ. 1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என். செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள், மாநில அரசு அனுமதி பெற்றுதான் சோதனை நடத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையின் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல் பொதுவாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். மேலும், அதனை திருத்தம் செய்து புதிய மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.