தங்க நகை கடன் புதிய விதிமுறைகள்: சென்னையில் தவாக ஆர்ப்பாட்டம்

தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகளை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகளை உடனே திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சி தலைவர் தி. வேல்முருகன் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் புதிய விதிமுறை ரத்து செய்க; பெருநிறுவனங்களுக்கு துணை போகாதே; ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்காதே என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நிருபர்களிடம் அக்கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது, பன்னெடுங்காலமாக பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்காக தேசிய வங்கிகளிலும், அரசு வங்கிகளிலும் நகை கடன் பெறுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி அரசு கடந்த வாரம், நகை கடன் வாங்குவதை குறைத்து, சில நிபந்தனைகளை விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இதை திரும்பப் பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி, ரிசர்வ் வங்கியை முற்றுகையிடுவோம் என்று அறிவித்திருந்தோம். இதற்கிடையில், மத்திய அரசு அவற்றில் சில மாற்றங்களை செய்து அறிவித்துள்ளது. இது ஏற்புடையது அல்ல என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி