இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை ஜூலை 26 அன்று தலைமைச் செயலகத்தில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் குறித்தும், இதனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை எடுத்துரைத்தும், தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது, மீனவ சங்கப் பிரதிதிகள் பாம்பன் தூக்குப்பாலம் அருகே கால்வாய் தூர்வார வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 87 மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 175 படகுகளையும் மீட்டுத்தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மீனவசங்க பிரதிநிதிகள் முதல்வரிடம் கேட்டுக்கொண்டனர்.