சென்னை: அதிமுக சின்ன விவகாரம் - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக்கோரி முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்பி யுமான ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் வாதத்தை பதிவு செய்த பின்னரே விசாரணை நடத்த தடை விதிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம். தீர்ப்பு வழங்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தெரிவித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி