சென்னை: வங்கிக்கடன் மோசடி வழக்கு; சிபிஐ-க்கு ஐகோர்ட் உத்தரவு

தொழிலதிபருக்கு எதிரான வங்கிக் கடன் வழக்கு விசாரணையை ஓராண்டில் முடிக்க வேண்டும் என சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழிலதிபர் சிவசங்கரன் இந்தியாவில் ஐடிபிஐ வங்கியில் 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றார். அந்த பணத்தை சட்டவிரோதமாக பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் உள்ள நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்துள்ளார். மேலும், வங்கியில் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தொழிலதிபர் சிவசங்கரனுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 

இந்த வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐ மேல் விசாரணையும் நடத்தி வருகிறது. அதன்படி, செஷெல்ஸ் நாட்டின் குடிமகனான கார்த்திக் பார்த்திபன் என்பவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி, கார்த்திக் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவருக்கு எதிரான வழக்கில் ஓராண்டில் புலன் விசாரணையை முடிக்க வேண்டும் என சிபிஐ-க்கு, நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மலேசியாவில் நடக்கும் சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள மனுதாரருக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி