வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், களத்தில் நின்று பணி செய்யும் போக்குவரத்து போலீசார் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, வெயிலை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு தினமும் 2 பாக்கெட் மோர் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக போக்குவரத்து போலீசார் 1,500 பேருக்கு குளிரூட்டும் கண்ணாடிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குளிரூட்டும் கண்ணாடிகளை போக்குவரத்து போலீசாருக்கு காவல் ஆணையர் அருண் நேற்று வழங்கினார்.
வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர். சுதாகர், இணை ஆணையர் பண்டி கங்காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.