இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமானது ஸ்ரீரங்கம் - ரங்கநாத சுவாமி கோயில், பழனி - தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த அரசு பொறுப்பேற்றபின், கடந்த 2021-ம் ஆண்டு திருச்செந்தூர் - சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் - மாரியம்மன் கோயில், திருத்தணி - சுப்பிரமணிய சுவாமி கோயில்களிலும், 2022-ம் ஆண்டு ராமேசுவரம் - ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை - அருணாச்சலேசுவரர் கோயில், மதுரை - மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் விதமாக அழகர்கோயில் கள்ளழகர், மருதமலை சுப்பிரமணியசுவாமி ஆகிய 2 கோயில்களில் இத்திட்டத்தை காணொலி வாயிலாக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், பழனி - தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பாக நடத்தப்படும் ஒரு பள்ளி மற்றும் 4 கல்லூரிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்தையும் முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.